Monday, September 3, 2012

மூன்றின் முனகல் சத்தம் !

ட ஒதுக்கீட்டை சிலர் மேம்போக்காக எதிர்க்கிறார்கள். அவர்களுக்கு சில கேள்விகள். இட ஒதுக்கீட்டை எதிர்ப்பவர்கள் தயவு செய்து கீழ் கண்ட கேள்விகளுக்கு எப்பாடு பட்டாவது விடை தேடித் தருவார்களேயானால் அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள்.


கல்வி :
தமிழகத்தில் கல்வி பெற முடியாத சூழ்நிலையில் இருப்பவர்கள் எத்தனை பேர்? அவர்கள் எத்தனை விழுக்காடு ?
அவர்களின் ஜாதி என்ன? அதாவது கல்வி பெற முடியாத சூழ்நிலையில் இருக்கும், பார்ப்பான் ( Brahmin ), பி.சி ( B.C ), எம்.பி.சி ( M.B.C ), எஸ்.சி ( S.C ), எஸ்.டி ( S.T ) என்று விழுக்காட்டையும் சேர்த்துக் கூறுங்கள். கல்வி பெற முடியாத சூழலில் உள்ளோரின் பெற்றோர் கல்வி நிலை என்ன? பெற்றோரின் ஜாதியை தனியாகக் கேட்கத் தேவை இல்லை. ஏன் என்றால் ? பெற்றோரின் ஜாதிதானே பிள்ளைக்கும் ! ஜாதிதான் பிறப்பின் அடிப்படையில் நிர்ணயிக்கப் படுகிறதே இந்தப் பாழாய் போன சமுதாயத்தில்.

பொருளாதாரம் : 
தமிழகத்தில் ஏழை எளியோர் எத்தனை பேர் ? அவர்கள் எத்தனை விழுக்காடு ? அவர்கள் ஜாதி என்ன?அதாவது ஏழை எளியோர்ஆக விளிம்பு நிலையில் இருக்கும் பார்ப்பான் ( Brahmin ), பி.சி ( B.C ), எம்.பி.சி ( M.B.C ), எஸ்.சி ( S.C ), எஸ்.டி ( S.T ) என்று விழுக்காட்டையும் சேர்த்துக் கூறுங்கள். ஏழை எளியோராக இருக்கும் அவர்களின் பெற்றோரின் பொருளாதார நிலை என்ன ?


இந்தப் புள்ளி விவரங்களை, விவரம் அறிந்த மக்கள் தேடிக் கண்டு பிடித்துக் கூறுவார்களேயானால் நம் திராவிட சமுதாயம் மேன்மையுற பாக்கியம் செய்தவர்களாவர்கள். எப்படி என்றால்? இந்தப் புள்ளி விவரத்தின் படி,  பார்ப்பான் ( Brahmin ), பி.சி ( B.C ), எம்.பி.சி ( M.B.C ), எஸ்.சி ( S.C ), எஸ்.டி ( S.T ) ஆகியோரில் கல்வி பெற வழி இல்லாதவர்கள் மற்றும் அவர்களில் ஏழை எளியோருக்கு கல்வியும், அந்த கல்வியின் மூலம் வறுமையை போக்கவும் இட ஒதுக்கீடு அத்தியாவசியம்.


இட ஒதுக்கீட்டால் பலன் பெற்றவர்களே திரும்ப திரும்ப பலன் பெறுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. இது நியாயமற்ற குற்றச்சாட்டு. எப்படி என்றால், இட ஒதுக்கீட்டின் பலனை திரும்ப திரும்ப  பெறக் கூடாது என்று கூறுவதற்கு முன்னால், இந்து மதத்தை யாராவது சீர்திருத்தி ஜாதி இல்லாமல் செய்து விட்டாலும்; By constitution, by law and by practice  ஜாதி ஒழிக்கப் பட்டுவிட்டாலும், தாராளமாக இட ஒதுக்கீட்டை  நிறுத்திவிடலாம்.

By constitution-வும் ஜாதி ஒழிக்கப் படாமல், 
By Law-வும் ஜாதி ஒழிக்கப் படாமல், 
By practice-வும் ஜாதி ஒழிக்கப் படாமல், 
இந்து மதத்திலும் சீர் திருத்தம் செய்யாமல் ஜாதி ஒழிக்கப்படாமல் இருக்குமேயானால், 
இட ஒதுக்கீடு வேண்டுமா கூடாதா ?

ஜாதி எந்த காலம் வரை பாதுகாக்கப் படுகிறதோ, அந்தக் காலம் வரை ஜாதிவாரி இட ஒதுக்கீடு இருந்துத்தானே ஆக வேண்டும் ?

ஜாதி படி நிலை இவ்வாறாக இருக்கிறது : 


நீங்கள் எதிர்ப்பது இட ஒதுக்கீட்டையா ? ஜாதியையா ?

நீங்கள் எதிர்ப்பது இட ஒதுக்கீடு என்றால், ஜாதியை எப்படி ஒழிக்கப் போகிறீர்கள்? என்று முதலில் கூறுங்கள். அதாவது, மக்களின் சிந்தனையில், மக்கள் சொல்லும் சொல்லில், மக்களின் செயலில், மக்களுக்கான சட்டத்தில், சட்டத்தை பாதுகாக்கும் அரசியல் சாசனத்தில், இந்து மதத்தில் என அனைத்திலும் எப்படி ஜாதியை ஒழிக்கப் போகிறீர்கள் ? இவற்றிற்கு விடை சொல்லாமல் இட ஒதுக்கீட்டை மட்டும் குருட்டுத்தனமாக எதிர்ப்பது நியாயமற்றதா இல்லையா ?

மாறாக, இட ஒதுக்கீட்டை எதிர்த்துக் கொண்டே, ஜாதிச் சான்றிதழ் வாங்குவதும், பிள்ளைகளை பள்ளியில் சேர்க்கையில் ஜாதி, மதம் குறிப்பிடுவது போன்றவை சொல்லொன்று செயல் ஒன்றாகும்.

நீங்கள் எதிர்ப்பது ஜாதியை மட்டும்தான் என்றால், ஜாதியை பாதுகாக்கும் இந்து மதத்தை எப்படி சீர்திருத்தப் போகிறீர்கள்? இந்து மதத்து வேதங்கள், சாஸ்திரங்கள், இதிகாசங்கள், புராணங்களை எப்படி மாற்றி எழுதப் போகிறீர்கள்? உருப்படியாக செய்ய வேண்டிய காரியம் என்னவென்றால், ஜாதிச் சான்றிதழ் வாங்கக்கூடாது. பிள்ளைகளை பள்ளியில் சேர்க்கையில், ஜாதி விவரம் கூறக்கூடாது; இந்து என்று எங்கேயும் பதிவு செய்யக் கூடாது.

மாறாக, ஜாதியை எதிர்த்துக் கொண்டே, இந்து மதத்தை ஏற்றுக் கொள்வது என்பது, மேலே ஏறும் escalator-ல் பின் பக்கமாக நடப்பதற்கு சமானம். Escalator மேலே ஏறுவது போல தோற்றம் அளித்தாலும். பின்னால் நடப்பதால் ஒரு ஏற்றமும் இருக்காது. 

நீங்கள் எதிர்ப்பது ஜாதி மற்றும் இட ஒதுக்கீடு என இரண்டையுமே என்றால், ஜாதியால் B.C-யான M.B.C-யான S.C-யான S.T-யான, அவர்களின் சமூக இழிவை போக்குவது எப்படி? ஜாதியின் பெயரால் கல்வி மறுக்கப்பட்டவர்களுக்கு கல்வி வழங்குவது எப்படி? ஜாதியின் பெயரால் அடக்குமுறைக்கு ஆளாகிறவர்கள் விடிவு பெறுவது எப்படி? ஜாதியின் பெயரால் படிக்காத பாமரராக, வேலை வாய்ப்பு பெறாமல் ஏழையாகவே தொடர்பவர்களின் கதி என்ன?

மாறாக, ஜாதியையும் எதிர்த்துக் கொண்டு இட ஒதுக்கீட்டையும் எதிர்த்துக் கொண்டு, தகுதி திறமை போய்விடும் என்றால்,
வாருங்கள்,

வாருங்கள்,ஜாதியின் பெயரால் என் மேல் தினிக்கப்பட்ட சாக்கடை அள்ளும் தொழிலை, இனி நாம் இணைந்தே செய்வோம்.

வாருங்க்கள், ஜாதியின் பெயரால் என் மேல் தினிக்கப் பட்ட தெருக்கூட்டும் தொழிலை, இனி நாம் இணைந்தே செய்வோம், சமுதாயத்தின் வீதியை இணைந்தே சுத்தம் செய்வோம்.

வாருங்கள், ஜாதியின் பெயரால் என் மேல் தினிக்கப்பட்ட விவசாயக் கூலித் தொழிலை, இனி நாம் இணைந்தே செய்வோம், விவசாய வளம் பெருக்குவோம்.

வாருங்கள், ஜாதியின் பெயரால் என் மேல் தினிக்கப்பட்ட பினத்தை எரிக்கும் தொழிலை நாம் இணைந்தே செய்வோம்.

வாருங்கள், ஜாதியின் பெயரால் என் மேல் தினிக்கப்பட்ட செருப்பு தைக்கும் தொழிலை நாம் இணைந்தே செய்வோம்.

வாருங்கள், ஜாதியின் பெயரால் என் மேல் தினிக்கப்பட்ட விவசாயத் தொழிலை நாம் இணைந்தே செய்வோம்.

வாருங்கள், ஜாதியின் பெயரால் என் மேல் தினிக்கப்பட்ட சலவை செய்யும் தொழிலை நாம் இணைந்தே செய்வோம்.

வாருங்கள், ஜாதியின் பெயரால் என் மேல் தினிக்கப்பட்ட ஆடு மாடு மேய்க்கும் தொழிலை நாம் இணைந்தே செய்வோம்.

ஜாதியின் பெயரால் என் மேல் தினிக்கப்பட்ட வீட்டு கழிவறையை சுத்தம் செய்யும் தொழிலை நாம் இணைந்தே செய்வோம். சமுதாயத்து மக்களின் சுகாதாரத்தை நாம் காப்போம்.

ஜாதியின் பெயரால் என் மேல் தினிக்கப்பட்ட மலம் அள்ளும் தொழிலை நாம் இணைந்தே செய்வோம். சமுதாயத்து மக்களின் சுகாதாரத்தை நாம் பாதுகாப்போம்.

இவ்வளவையும் கேட்பதற்கே உங்கள் எண்ணம் கூசினால், இவ்வளவையும் கேட்பதற்கு நாராசமாக இருந்தால், இவ்வளவையும் கேட்பது கூட அருவருப்பைத் தருமானால், தோழர்களே மன்னித்து கொள்ளுங்க்கள்; ஒரு நிமிடம் சிந்தித்துப் பாருங்கள் - கேட்பதற்கே கூக்சமாக இருக்கும் இவ்வளவையும் செய்து கொண்டு இன்றும் தமிழக்த்தில் மக்கள் இருக்கிறார்கள் - மனிதர்கள் என்று பெயரளவில் மட்டும்.

இவ்வளவு கொடுமைகளையும் அனுபவித்துக் கொண்டு இருப்பவர்கள், கல்வியிலும் உத்தியோகத்திலும் உயர்வதற்கு அவர்களுக்கு இட ஓதுக்கீடு வேண்டுமா கூடாதா? அவர்கள் கேட்பது பிச்சை அல்ல - உரிமை. மறுக்கப்பட்ட உரிமை !

இதற்கும் மேலேயும் ஜாதி வாரி இட ஒதுக்கீட்டால் தகுதி திறமை போய் விடும் என்றால், இட ஒதுக்கீட்டில் பலன் பெற்றவர்களால்தான் தகுதி திறமை குறைந்தது என்பதற்கு என்ன ஆதாரம்? தேடித் தேடித் பார்த்தும் இட ஒதுக்கீட்டால் பலன் பெற்ற தோழர்கள் எவ்வளவோ பேர் இருக்கிறார்கள். அவர்கள் யாரும், தாங்கள் இட ஒதுக்கீட்டால் பலன் பெற்றோம் என்று சொல்வதற்கும் கூச்சப்படுகிறவர்கள். இட ஒதுக்கீட்டால் பலன் பெற்ற எண்ணற்ற ஆராய்ச்சியாளர்கள்(Scientists) இருக்கிறார்கள், மருத்துவர்கள்(Doctors) இருக்கிறார்கள், பொறியாளர்கள்(Engineers) இருக்கிறார்கள், ஆசிரியர்கள்(Teachers) இருக்கிறார்கள். இட ஒதுக்கீடு பெற்றவர்களிடம்தான் ஒழுக்கமும் நியாயமும் நேர்மையும் சமூக அக்கறையும் காண முடிகிறது.

தற்போது தமிழகத்தில் 69 % இட ஒதுக்கீடு இருக்கிறது. அப்படி என்றால் 31% இட ஒதுக்கீட்டில் வர வில்லை என்றுதானே பொருள். 31% இட ஒதுக்கீடு பெறாத மக்களே உங்கள் தகுதி திறமையை எங்கே ஒளித்து வைத்துக் கொண்டு இருக்கிறீர்கள்? என்று தயவு செய்து கூறுங்கள். இந்த 31% மக்கள் தகுதி திறமையை கண்டு பிடித்துத் தருகிறவர்களுக்கு நம் பாராட்டுக்கள். 





மிழகத்தில் இட ஒதுக்கீட்டின் பலனை அனுபவிக்காதது உயர்ஜாதி பார்ப்பனர்கள் மட்டுமே. அவர்களின் மக்கள் தொகை விழுக்காடு 3%. அந்த 3% பார்ப்பனர்களில் எத்தனை பேர் கல்வியில்லாமல் இருக்கிறார்கள். அந்த 3% பார்ப்பனர்களில் எத்தனை பேர் ஏழை எளியோர் என்ற புள்ளி விவரம் யாரிடம் இருக்கிறது?இவற்றை எல்லாம் கண்டு பிடித்து தருகிறவர்களுக்கு சிறப்பு பாராட்டுகள்.

இந்தப் புள்ளி விவரங்களைத் தராமலும், இந்தப் புள்ளி விவரங்களை பெற்று விடக் கூடாது என்றும் முனைப்பாக இருப்பவர்களும்: "தகுதி திறமை போய்விடும்" என்று புலம்புவது பார்ப்பனீய செயலா இல்லையா? என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும் !

உண்மையுடன்
திராவிடன் கமுகக்குடி மாரிமுத்து
லண்டன்



No comments:

Post a Comment