இளையராஜா - இசை சாம்ராட்.
இளையராஜா இசைக்கு இசையாதோர் யாரோ ?
இளையராஜா சுவாசிப்பது காற்றை அல்ல, இசையை !
மிகச் சிறந்த இசைக்கருவிகள் உதவியோடு தன் இதயத்தில் உதித்த இசையை மக்கள் இன்புற வெளியிட்டு விட்டு, அந்த இசைக்கு அவர்கள் வைத்த பெயர் 'ஒன்றும் இல்லைங்க வெறும் காத்து ', அதாவது 'Nothing But Wind'.
அப்படி இல்லை என்றால், சிறந்த இசைப்பாடல்களை தந்து விட்டு என்ன பெயர் வைப்பது என்று தெரியாமல் வைத்த பெயர், 'எப்படிப் பெயர் வைப்பது ', அதாவது 'How to Name it ?' எனவாக பெயர் வைத்தார்கள்.
கலைஞர் அவர்கள் ஒருவருக்கு பெயர் சூட்டுகின்றார் என்றால் அதில் எப்போதும் ஒர் ஆழமான பெயர்க் காரணம் இருக்கும். அந்த பெயர்க் காரணமும், பெயர் சூட்டப் படுபவரின் செயல்க் காரணத்தை அடிப்படையாய்க் கொண்டு இருக்கும். கலைஞர் எப்போதும் சும்மாப் பேருக்கு பெயர் வைப்பவர் இல்லை. இதை நாம் உண்மை என்று உணர்ந்து கொள்வதற்கு, கலைஞர் இளையராஜாவுக்கு சூட்டிய 'இசைஞானி' எனும் பட்டமே சாட்சி!
இளையராஜா, தேனி மாவட்டம் தந்த, பண்ணையப்புரம் பெற்று எடுத்த இசைப் புத்தகம். இந்த புத்தகத்தைப் படிக்க படிக்க ஆனந்தம். ஆம், இவரும் கிராமத்துக் குயில்தான்.
வைக்கத்தில் உள்ள கோவிலைச் சுற்றி உள்ள தெருக்களில், இந்து மதத்தின் கொடுமையால், தாழ்த்தப்பட்ட சகோதரர்கள் நடக்கக் கூட உரிமை இல்லாது இருந்தது. தந்தை பெரியார் தமிழகம் முழுதும் சுயமரியாதைப் பிரச்சாரம் செய்து கொண்டு இருந்தார். அப்போத ஒரு கிராமத்தில் சுயமரியாதைப் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார்கள். தந்தை பெரியாருக்கு ஒரு தந்தி வருகிறது. தந்தி என்னவென்றால்? வைக்கத்தில் தாழ்த்தப்பட்டவர்களின் உரிமை மீட்புக்கு தலைமை ஏற்க வேண்டும் எனும் தந்திதான் அது. அந்த கிராமம் வேறு ஒன்றும் இல்லை - பண்ணையப்புரம்தான் அந்தக் கிராமம்!
நாற்பது வருடங்களுக்கு முன் கிராமங்களில் இருந்து மூன்று இளைஞர்கள் கனவுகளை மட்டும் கை இருப்பாய் கொண்டு, தங்கள் திறமையின் மேல் மட்டும் நம்பிக்கை வைத்து,உழைப்பை மட்டுமே மூலதனமாய்க் கொண்டு,சென்னை நகரம் வந்தனர். அவர்களை தமிழ்த் திரை உலகின் மும்மூர்த்திகள் எனலாம், அவர்கள் இளையராஜா, வைரமுத்து மற்றும் பாரதிராஜா.,
அவர்களுக்குள் இருந்தது திறமை மட்டும் அல்ல, வெறி. திறமைகளை வெளிப்படுத்த வெறி.இவர்களில் இளையராஜா, முத்தமிழாம், இயல் இசை நாடகத்தில், இரண்டாம் தமிழாம் இசைத் தமிழை பெருமைப் படுத்தி உள்ளார்.
அக்கால இளைஞர்களுக்கு 'அன்னக்கிளி' ஆகட்டும், மத்தியகால இளைஞர்களுக்கு 'தேவர் மகன்' ஆகட்டும், இக்கால இளைஞர்களுக்கு 'நீதானே என் பொன் வசந்தம்' ஆகட்டும், அன்றும் இன்றும் என்றும் அவர் இசையில் ராஜா தான்.
இசை உலகின் முடிசூடா மன்னன்; இனிய ராஜா; இசை ராஜா தான் இளையராஜா.
அவர் 'இசை மேஸ்ட்ரோ', 'இசை மேதை'. இளையராஜாவுக்கு இசை தான் எல்லாம்.
காலத்தை பிரித்து அறிய கி.மு(கிறிஸ்துவுக்கு முன்) கி.பி(கிறிஸ்துவுக்கு பின்) என்று கூறி விடலாம். தமிழ்த் திரை இசையைப் பிரிக்க இ.மு. என்றும் இ.பி என்று கூறலாம்.
இ.மு - இளையராஜாவுக்கு முன்.
இ.பி - இளையராஜாவுக்கு பின்.
தமிழகத்தில் எண்பதுகளில் வந்த திரைப்படங்களில் கதை திரைக்கதை தயாரிப்பாளர் வசனம் இயக்குனர் போன்ற பெயர்கள் மாறி மாறி வந்து கொண்டு இருந்தன, ஆனாலும் இசை என்ற பெயருக்கு மட்டும் மாறாமல் இருந்த ஒரு பெயர் இளையராஜா!
'திருவாசகம்' தமிழ் புத்தகத்தில் மட்டும் கேள்விப் பட்டு இருந்த இளைஞர் கூட்டத்திற்கு, அவர் இசையின் மூலம் மீண்டும் வெளிச்சம் காட்டி இருக்கின்றார். இளையராஜா இசைக்கு உருகாதோர் ஒரு இசைக்கும் உருகார்.
ஜாதிப் பிரிவினை பார்ப்பதே தப்பு. இதிலும் சாதிப் பிரித்து திறமை பார்ப்பது மகாக் கேவலம்.இதற்கு மேலும் ஜாதி த்வேஷம் பாத்துண்டே திறமை மதிக்காதவாள் தலையில், வங்கக் கடலில் விழ வேண்டிய இடிகள் நங்கென்று நெஞ்சில் விழக் கடவதாக. வங்கக்கடல் எங்கேயோ தூரத்தில் அல்லவா இருக்கிறது என்போருக்கு, சொல்லிக் கொள்வது, வங்கக் கடல் தூரத்தில் தான் இருக்கிறது, ஆனால் அந்த இடிகள், கூகிள் மேப் (Google Map ) உதவியோடு உங்களைக் கண்டு பிடித்து விடக் கூடுவதாக.
ஒரு சில புல்லுருவிகள் அவர் அந்த ஜாதி, இந்த ஜாதி என்று அவரைச் சிறுமைப்படுத்தப் பார்க்கின்றனர். அப்படிப் பட்டோர்க்கு தாழ்மையான வேண்டுகோள். 'அடப் பதர்களே ..... இளையராஜாவின் இசையை இரவில் கேட்டு நிம்மதியாய் தூங்கும் அற்ப மானிடர்கள் நீங்கள், அவரையே ஜாதிப் பிரித்து ஏசும் நீங்கள் தான் எண்ணத்தால் கீழ்ப்பிறவி.'
தாளங்களும் ராகங்களும் இவர் கடைக்கண் தங்கள் மேல் படுமா என்று ஏங்கித் தவிக்கின்றன. அவர் வாங்கிய விருதுகள் ஏராளம். ஆனாலும் அவர் விருதுக்கு இசைப்பவர் அல்ல. விருதுகள் அவருக்கு ஒரு பொருட்டே அல்ல. விருதுகள் அவருக்கு 'சிறு பொருள்' அவ்வளவு தான். அவர் உலகம் தனி உலகம்; தான் பெற்ற இசையைப் பெருக இவ்வையகம் என்பதுதான் இளையராஜா.
இளையராஜா தன் மானசீக குருவாக கொள்வது மூவரை, அவர்கள் மேல் நாட்டு இசை மேதைகள் Beethoven, Bach மற்றும் Mozart.
மேதைகளின் திறமைகள் இன்று இரவு படுத்து நாளை காலை விழிக்கும் போது உருவாவது இல்லை. அதாக பட்டது தமிழ் திரைப்படங்களில் வருவது போல் ஒரே பாடலில், அதுவும் ஐந்து நிமிடத்தில் வருவதும் இல்லை.
மேதைகளின் திறமை தினம் தினம் பட்டைத் தீட்டப்பட்டு, பின் பல நாள் கழித்தே பார் அறியும் வண்ணம் வரும். இளையராஜாவும் இப்படித்தான். தன் 14வது வயதிலேயே நாடோடி இசைக்குழுவில் சேர்ந்து தென் தமிழகத்தைச் சுற்றி வந்தவர். பல ஆண்டுகள் கழித்தே அவர் இசைப் புகழ் தமிழ் நாடறியும் வண்ணம் வந்தது.
இப்போது உலகறியும் வண்ணமாய், BBC -யில் உலகின் சிறந்த பத்து பாடல்களில் ஒன்றாக, இளையராஜாவின் இசையில் வெளிவந்த 'ராக்கம்மா கையத் தட்டு' பாடல் பலராலும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இளையராஜா இசை அமைத்த நானூறாவது திரைப்படம் நாயகன், ஐநூறாவது படம் அஞ்சலி.
ஆயிரம் எப்போது வரும் என்று நாம் காத்து கொண்டு இருகின்றோம்.
உணவிற்கு பெயர் பெற்ற சரவணா பவன் ஹோட்டலுக்கு, பின் மாலைப் பொழுதில் சென்ற பொழுது, உணவு விடுதியில் இளையராஜா பாடல்கள் ஒலிபரப்பி கொண்டு இருந்தது.
என்ன இனிமையான பாடல்கள் .. எல்லாம் முத்தான பாடல்கள்....
அய்யன் வள்ளுவர் கூறியது,
செவிக்கு உணவு இல்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப் படும்.
வள்ளுவன் கூறியது கேள்வி செல்வம் என்றாலும், நாம் அப்போது இரு செவியையும், இருக்கும் ஒரே இதயத்தையும் இளையராஜாவிடம் கொடுத்து விட்டு, சர்வரிடம் ஒரு தோசை சொல்லியாயிற்று. தோசை வர தாமதம் ஆயிற்று. அதைப் பற்றி நமக்கேன் கவலை, அதுவும் இளையராஜா இசைத்து கொண்டிருக்க.
திடீரேனே ஒரு தடங்கல்; வேறென்ன, தோசை வந்து விட்டது. தட்டு தடால் என மேஜையில் வைக்கப் படுகிறது. ஒரே அபஸ்வரம் ... இருந்தாலும் பொறுத்துக் கொண்டு இசையை அனுபவித்து கொண்டே உண்கிறோம்.
மீண்டும் சிறிது நேரம் கழித்து சர்வர் வருகின்றார், இசையின் நடுவே, வேறு எதுவும் வேண்டுமா என்று வினவுகின்றார். நாம் ஒன்றும் வேண்டாம் என்கின்றோம். இசையை ரசித்து கொண்டே உணவை உண்டு முடித்த பின்னும் சர்வர் இசையை இடை மறிக்கும் விதமாய், 'வேறென்ன சார்' என்கின்றார்.
நாமோ பொறுமை இழந்து, 'இப்போ சாப்பிட்ட பில்லை கான்செல் பண்ணி விடுங்கள் சார்' என்கின்றோம். சர்வர் நகர்ந்து செல்கின்றார்.
நாம் மீண்டும் இசையை ரசிக்கின்றோம்!
இயற்கை என்றுமே அவர் இசைக்கு இணைந்து கை கொடுக்கும். எங்கெல்லாம் வார்த்தை வெற்றிடம் வருகின்றதோ, அங்கெல்லாம் ஓரமாய் ஒரு குயில் குதூகலமாய் கூவிக் கொண்டு இருக்கும். ஒரு மயில் மகிழ்ச்சியாய் ஆடிக் கொண்டும் இருக்கும்.
சில இசை அமைப்பாளர்களுக்கு மின்சாரம் இல்லை என்றால் இசை அமைக்க முடியாது, ஏன் என்றால் அவர்கள் மேற்கத்தியக் கருவிகளைச் சார்ந்திருப்பதால். அதிலும் சில இசை அமைப்பாளர்கள் இருக்கின்றார்கள், அவர்களுக்கு மின்சாரமும் வேண்டும், ஆங்கில இசை குறுந்தகடுகளும் வேண்டும், கூடவே கூகுள் (Google) வேண்டும். பின்னே இசையை எங்கே தேடுவதாம். நீங்களா அவருக்கு இசை அமைத்து கொடுப்பீர்கள்.ஆனால் இளையராஜாவால் மின்சாரம் இருந்தாலும் இல்லா விட்டாலும் இசை அமைக்க முடியும். அவருக்கு கருவிகள் ஒரு பொருட்டே அல்ல. அந்த ஹார்மொனியும் மட்டும் போதும். இன்னும் சுருங்கச் சொன்னால் தற்போதைய மின்வெட்டுப் பிரச்சினை இளையராஜாவின் இசையை சற்றும் குலைக்க முடியாது.
அது யாருப்பா ? அங்க பின்னாடி இருந்து குரல் கொடுப்பது; "அதான் இளையராஜா லண்டன் போயிட்டாரே! அங்க எப்படி கரண்ட் கட் ஆகும்?" என்று !!!
வள்ளுவன் வாக்கு என்ன வெனில்.
ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு.
அதாகப் பட்டது, கொடுப்பது, அதனால் புகழுடன் வாழ்வது ; இதை விட ஓர் உயிர்க்கு பயன் உள்ளது வேறேதும் இல்லை. என்கின்றார்.
இந்த குறளை இளையராஜாவிற்காக முன் செருகல் சேர்த்தால்,
இசை ஈதல், இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு.
அதாகப் பட்டது, இசையை கொடுப்பது, அதனால் புகழுடன் வாழ்வது ; இதை விட ஓர் உயிர்க்கு பயன் உள்ளது வேறேதும் இல்லை. எனக்கூறலாம்.
தமிழ் பண்பாட்டுக்குக் காப்பான, தமிழர் உரிமைக்கு போர்வாளான, தமிழர் மான மீட்புக்கு உதவியான, தமிழர் பெருமைக்கு சான்றான 'திருக்குறள்' இலக்கியத்தை இளையராஜா இசையில் கேட்டால் எப்படி இருக்கும்? என்று அவா எழுவதுண்டு. மேதைகள் எளியோர் அவாவுக்கு இசைபவர்கள் இல்லையே ! என்றாவது திருக்குறள் முழுமைக்கும் இசை ஞானி இசையில் கேட்கும் வாய்ப்பு பெற்றால் தமிழ்ச் சமுதாயத்துக்கு இசை ஞானி செய்யும் மிகப் பெரிய சேவையாக அது இருக்கும் !
இசை ஞானி இளையராஜா அவர்களுக்கு பாரத ரத்னா கொடுத்து இந்திய அரசு தன்னை கௌரவப் படுத்திக்கொள்ள வேண்டும்!
உண்மையுடன்
திராவிடன் கமுகக்குடி மாரிமுத்து
லண்டன்
No comments:
Post a Comment