Sunday, February 12, 2012

ஜாதி ஒழிக்கப்பட வேண்டும் !


கடவுள் இல்லை - கடவுள் இல்லை - கடவுள் இல்லவே இல்லை
கடவுளை பரப்புபவன் அயோக்கியன்
கடவுளை படைத்தவன் முட்டாள்
கடவுளை நம்புகிறவன் காட்டுமிராண்டி!
- தந்தை பெரியார்


ஜாதி இருக்கிறது; ஜாதி ஒழிக்கப்பட வேண்டும்

யார் தன்னை பிராமணன் என்கிறானோ? அவன் மகா மகா அயோக்கியன்

யார் தன்னை ஜாதியினால் அடையாளப் படுத்திக் கொள்கிறானோ? அவன் முட்டாள்

யார் தன் ஜாதி அடுத்த ஜாதியை காட்டிலும் உயர்ந்தது என்கிறானோ? அவன் அடிமுட்டாள்

யார் அடுத்தவரை தாழ்ந்த ஜாதி, பிற்பட்ட ஜாதி, மிகவும் பிற்பட்ட ஜாதி என்கிறானோ? அவன் காட்டுமிராண்டி

தாழ்ந்த மக்கள் என ஒருவரும் இல்லை; தாழ்த்தப்பட்ட மக்கள்தான் இருக்கிறார்கள். யாரால் தாழ்த்தப்பட்டார்கள் ? மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களால் , பிற்படுத்தப்பட்டவர்களால், உயர் ஜாதியினரால் ஆகிய மூவராலும் தாழ்த்தப்பட்டார்கள்.

மிகவும் பிற்பட்ட மக்கள் என ஒருவரும் இல்லை; மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள்தான் இருக்கிறார்கள். யாரால் மிகவும் பிற்படுத்தப்பட்டார்கள் ? பிற்படுத்தப்பட்டவர்களால்,  உயர் ஜாதியினரால் ஆகிய இருவராலும் மிகவும் பிற்படுத்தப்பட்டார்கள்.

பிற்பட்ட மக்கள் என ஒருவரும் இல்லை; பிற்படுத்தப்பட்ட மக்கள்தான் இருக்கிறார்கள். யாரால் பிற்படுத்தப்பட்டார்கள் ? உயர் ஜாதியினரால் பிற்படுத்தப்பட்டார்கள்.

தாழ்த்தப்பட்ட ஒருவரின்  குழந்தை எப்படி அடையாளம் காணப்படுகிறார் ? மிகவும் பிற்படுத்தப்பட்டவர் ஒருவரின் குழந்தை எப்படி அடையாளம் காணப்படுகிறார் ? பிற்படுத்தப்பட்டவர் ஒருவரின் குழந்தை எப்படி அடையாளம் காணப்படுகிறார்?

தாழ்த்தப்பட்டவரின் குழந்தையை, தாழ்த்தப்பட்டவராகத்தான் அடையாளப் படுத்துகிறது சமூகம். மிகவும் பிற்படுத்தப்பட்டவரின் குழந்தையை, மிகவும் பிற்படுத்தப்பட்டவராகத்தான் அடையாளப் படுத்துகிறது சமூகம். பிற்படுத்தப்பட்டவரின் குழந்தையை, பிற்படுத்தப்ப்பட்டவராகத்தான் அடையாளப் படுத்துகிறது சமூகம்.

ஆக, பிறப்பால் ஜாதி சங்கிலி தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. எப்படி கணிதத்தில் Pi Value எப்போதும் Constant-ஆக 3.14 என்று இருக்கிறதோ, அதுபோல நம் மேலும் நம் குழந்தைகளின் மேலும் ஜாதி தொடர்ச்சியாக Constant-ஆக இருக்கிறது.




என்னதான் நம் 'அறிவு' வட்டம் பெரிதானாலும், என்னதான் நம் 'தெளிவு' வட்டம் பெரிதானாலும், என்னதான் 'தகுதி' வட்டம் பெரிதானாலும், என்னதான் நம் 'திறமை' வட்டம் பெரிதானாலும், இவைகளுக்கு ஏற்ப 'பொருளாதார' வட்டம் பெரிதானாலும், 'ஜாதி' எனும் Constant நம்மோடு ஒட்டிக் கொண்டிருக்கிறதே; அதைப் பற்றிக் கவலை இல்லையா ? இல்லையானால் - அறிவு வளர்ச்சி, தெளிவு வளர்ச்சி, தகுதி வளர்ச்சி, திறமை வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி வந்தவுடன் கீழ் ஜாதி எனும் இழிவு பெரிதாகத் தெரியவில்லையா ?

என்றாவது, எங்காவது தாழ்த்தப்பட்ட சகோதரர்கள் குறைந்தபட்சம், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களாகவோ, பிற்படுத்தபட்டவர்களாகவோ உயர்த்தப் பட்டிருக்கிறார்களா?


என்றாவது, எங்காவது மிகவும் பிற்படுத்தப்பட்ட சகோதரர்கள் குறைந்தபட்சம், பிற்படுத்தபட்டவர்களாக உயர்த்தப் பட்டிருக்கிறார்களா?


என்றாவது, எங்காவது பிற்படுத்தப்பட்ட சகோதரர்கள் ,  உயர் ஜாதியாக உயர்த்தப் பட்டிருக்கிறார்களா?

இப்படி, ஜாதியானது மாறாமல் இருக்கிறது பாருங்கள், இதுதான் இந்துமதம் விளக்கும் சனாதன தர்மம். அதாவது மாறாதது. 'மாற்றம் ஒன்றுதான் மாறாதது' எனும் மானுட கோட்பாட்டுக்கு எதிர்மறையானது இந்த சனாதன தர்மம்.

ஆகையால்தான், சமூக சமத்துவம் பெற இட ஒதுக்கீடு எனும் முறை கொண்டு வரப்பட்டது.

ஜாதி ஒழிக்கப்படும் வரை இட ஒதுக்கீடு இருக்க வேண்டும். இதில், விரைவாக சமூகநீதி பெற வேண்டியவர்கள் அதிகம் பாதிக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட தோழர்கள்தான். அடுத்ததாக, சமூகநீதி பெற வேண்டியவர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்ட தோழர்கள்தான். அதற்கும் அடுத்ததாக, பிற்படுத்தபட்ட தோழர்கள்.

தந்தை பெரியார் அவர்கள் தனக்கே உரித்தான கூரிய சமூக சிந்தனையோடு கூறுவார்கள் :  "கிணத்துல ரொம்ப கீழ இருக்கிறவனுக்கு பெரிய நீள கயிறு கொடுத்து மேல கூட்டிட்டு வா. அதுக்கும் மேல கிணத்துல் இருக்கிறவனுக்கு, அவனை வெளியில எடுத்துட்டு வர அளவுக்கு கயிறு கொடு. அப்புறம் சம தளத்துக்கு எல்லோரும் வந்தப்புறம் தகுதி திறமை எல்லாம் பாக்கலாம். சம தளத்துக்கு வரவரை கயிறு கொடுத்துகிட்டுதான் இருக்கனும்" என்றார்கள்.

நீங்களே சொல்லுங்கள், ஜாதி நம் தோளில் திணிக்கப்பட்டு இருக்கும் வரை, அடுத்தவர் தோளில் உயர் ஜாதி எனும் அடையாளம் தொங்கி கொண்டிருக்கும் வரை இட ஒதுக்கீடும் இருந்துதானே ஆக வேண்டும்.

நம் தோளில் திணிக்கப்பட்ட ஜாதியில் இருந்து விடுதலை கிடைக்கும் போது, அடுத்தவர் தோளில் உயர் ஜாதி எனும் அடையாளம் நீங்கும் போது இட ஒதுக்கீட்டை ஒழிக்க யாருக்கு என்ன குறைச்சல் ?

தந்தை பெரியார் தந்த உழைப்பும் அறிவும்தான், திராவிடருக்கு மானத்தையும் அறிவையும் பெற வைத்தது.

சிந்தித்துப் பாருங்கள் - கொள்வன கொண்டு விடுவன விடுங்கள்.


உண்மையுடன்
திராவிடன் கமுககுடி மாரிமுத்து